தமிழக அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது- சபாநாயகர் அப்பாவு பேட்டி

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஒரு இடத்திலும் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்;

Update:2025-08-06 13:43 IST

நாகர்கோவில்,

சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்திய வெளியுறவு கொள்கை பலவீனம் ஆகிவிட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை உலகளவில் ஒரு நாடு கூட கண்டிக்கவில்லை. அதுவே நம்முடைய பலகீனம் தானே. சபாநாயகர் தொகுதியிலேயே சட்ட ஒழுங்கு சரியில்லை என்று இன்பதுரை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதை வைத்து முடிவு எடுக்க முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஒரு இடத்திலும் இல்லை.அதே சமயம் திருப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு தென்மாவட்டங்களுக்கு அதிக வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு தான் மேற்கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் எந்த காரணத்துக்காக குற்றம் சொல்கிறார் என்று தெரியவில்லை.தமிழகம் தான் இந்தியாவிலேயே கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆகும். இந்த புள்ளி விவரத்தை மத்திய அரசு தான் தந்துள்ளது. எனவே அதை எல்.முருகன் படிக்க வேண்டும்.

தமிழக அரசு வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ செய்து வருகிறார்கள்.தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதை தாங்க முடியாமல் இதுபோன்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரின் சுற்று பயணத்தால் தமிழகத்தில் எதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்