மத்திய அரசு, நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.;

Update:2025-11-06 16:13 IST

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்விலிருந்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்றக் கோரி மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் மனுத் தாக்கல் செய்தது. தற்போது அதே வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளது.

Advertising
Advertising

வழக்கின் இறுதி கட்டத்தில் இவ்வாறு மத்திய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும், நீதிமன்ற நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவது, அதன் மாண்பிற்கும், அடிப்படை ஜனநாயகத்திற்கும் விரோதமாகும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள், 'நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் சில வழக்குகளை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நினைக்கிறதா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறிவிடுங்கள்' என்று கூறியிருப்பதன் மூலம், இந்த அரசின் நியாயமற்ற நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தீர்ப்பாய நியமனங்கள் குறித்து முன்வந்துள்ள வழக்கில் நீதித்துறை தன்னிச்சையையும் நியாயத்தையும் காக்கும் முயற்சியில் இருக்கும் வேளையில், மத்திய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தை தகர்க்கும் அபாயகரமான முன்மாதிரியாகும்.

அதனால், மத்திய அரசு உடனடியாக நீதிமன்ற நடைமுறையை மதித்து, அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்