சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகள் அகற்றம்
கழிவுகள் அகற்றப்பட்ட பின்னர் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் திருவாளர் பிரிமீயர் பிரிசிசன் சர்ஃபேஸ் (M/s. Premier Precision Surface) நிறுவனத்தின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக்கழிவுகள் அகற்றும் பணியானது 7 மண்டலங்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற வழக்கின் காரணமாக இப்பணிகளை மேற்கொள்வதில் பெரிதும் இடர்பாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக்கழிவுகள் சீராக அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியும் சுகாதார சீர்கேடு, விபத்துகள் ஏற்படுதல், வளர்ச்சிப் பணிகளில் தடங்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதில் உரிய தீர்வுகண்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் செம்மைப் படுத்தப்பட்டு இப்பணிகள் கடந்த 07.01.2025ஆம் நாளன்று மேயரால் தீவிர கட்டிடக் கழிவுகள் அகற்றும் பணி தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 17.01.2025 முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக 15 மண்டலங்களிலும் டிப்பர் வாகனங்கள், பாப் காட் வாகனங்கள், ஜே.சி.பி. வானகங்கள், டாடா ஏஸ் வாகனங்கள், டிப்பர் லாரிகள், உள்ளிட்ட 168 வாகனங்களைப் பயன்படுத்தி சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன.
கடந்த 07.01.2025 முதல் 22.07.2025 வரை 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடம் மற்றும் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள கட்டிடக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் அனைத்துப் பகுதிகளையும் வாரத்தில் மூன்று முறை ஆய்வு செய்து, அவ்விடங்களில் உள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை ஒப்பமுறைப்படி அகற்றவும், சாலைகளின் தூய்மையைப் பராமரிக்கும் விதமாக மாநகராட்சி அலுவலர்கள், திட்ட மேலாண்மைப் பணியாளர்கள் (PMC) மற்றும் ஒப்பந்ததாரர் மேற்பார்வையாளர்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளின் இருப்பிடத்தை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் செயலி (app) வடிவமைக்கப்பட்டு, அதன் மூலம் கட்டுமானக் கழிவுகளின் இருப்பிடங்கள் தெரிவிக்கப்பட்டு உரிய ஒப்புதல் பெற்ற பின் ஒப்பந்ததாரர் கழிவுகளை அகற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றப்பட்ட பின்னரும் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் 21.04.2025 முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அலுவலர்களுக்கும் கருத்துப்பட்டறை மற்றும் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், வணிக வளாகப்பகுதிகளிலும் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றாதவர்களிடமிருந்து ஜனவரி-2025 முதல் 22.07.2025 வரை 39.30 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்திலும் (https://chennaicorporation.gov.in/gcc/CandD_Waste_Management/), மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.