சென்னை: சுவர்களுக்கு இடையே சிக்கிய மூதாட்டி - தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி மீட்டனர்

2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.;

Update:2025-05-19 01:25 IST

சென்னை மணலி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பொம்மி (60 வயது). இன்னும் திருமணம் ஆகாத இவர், உறவினருடன் வாழ்ந்து வருகிறார். இவரது உறவினர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று இருந்தனர். வீட்டில் பொம்மி மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் வீடு துடைக்க பயன்படுத்தப்படும் 'மாப்', மொட்டை மாடியில் இருந்து இவரது வீட்டுக்கும், அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கும் இடையே உள்ள சுமார் அரைஅடி சந்தில் விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக அந்த சந்துக்குள் சென்ற பொம்மி, 2 வீடுகளின் சுவருக்கு இடையே சிக்கிக்கொண்டார்.

நீண்டநேரம் முயற்சி செய்தும் அவரால் வெளியே வரமுடியாததால் பயத்தில் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பொம்மியை காப்பாற்றி வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மணலி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, 2 வீடுகளின் சுவருக்கு இடையே சிக்கி தவித்த பொம்மியை பத்திரமாக மீட்டனர். இதில் அவருக்கு முகம், முதுகு போன்ற இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொம்மியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்