தலைமைச் செயலக ஊழியர்களுடன் பொங்கல் கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-14 11:32 IST

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பொங்கல் கொண்டாடினார். வேஷ்டி, சட்டை அணிந்து பாரம்பரிய முறைப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள் - தைத்திருநாள் - உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ்நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.

நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன். அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள் - செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ்நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன்.

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள். பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக் கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட என எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்