முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண திட்டங்கள் ரத்து
சபரீசனின் தந்தை மறைவு காரணமாக மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.;
கிருஷ்ணகிரி,
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
சபரீசனின் தந்தையும், மு.க.ஸ்டாலினின் சம்பந்தியுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக ஓ.எம்.ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் காலமானார். வேதமூர்த்தியின் உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கிருஷ்ணகிரி வந்துள்ளார். அங்கு ஓசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்றும், நாளையும் கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிலையில், சபரீசனின் தந்தை மறைவு காரணமாக மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். இதனால் அவரது பயண திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.