முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு
முதல்-அமைச்சர் தலைமையிலான குழு ஜெர்மனியிலிருந்து 7,020 கோடி ரூபாய் முதலீட்டுகளை ஈர்த்துள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பிய முதலீட்டு சந்திப்புகளின் போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.
இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்-அமைச்சர் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு 13,016 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 17,813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பாக இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்புகளை நிறுவிட அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகள் மேற்கொள்ள இந்தக் குழுமம் திட்டமிட்டுள்ளது, இது, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை முன்னிறுத்துகிறது.
அஸ்ட்ராஜெனெகாவின் GITC, அஸ்ட்ராஜெனெகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் மூன்றாவது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் முதல்-அமைச்சர் தலைமையிலான நிர்வாகத்தின் மீது உள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் முதல்-அமைச்சர் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும், இது GCC-க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,493 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 820 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து பயணத்திற்கு முன்பாக, முதல்-அமைச்சர் தலைமையிலான குழு 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஜெர்மனியிலிருந்து 7,020 கோடி ரூபாய் முதலீட்டுகளைஈர்த்துள்ளது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரெயில்வே , ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .