கூடலூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்: தலைவாழை இலையில் விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்
கூடலூர் அருகே அத்திப்பாளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளியின் ஆசிரியர் பூர்ணிமா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.;
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அத்திப்பாளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் ஆசிரியர் பூர்ணிமா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாட்டு, நடனம், பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் அனைத்து மாணவர்களையும் அமர வைத்து தலைவாழை இலையில் சைவம், அசைவ பிரியாணி மற்றும் இனிப்புகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிமாறினர். இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னதாக ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் ஸ்ரீஜா மற்றும் தேன்மொழி ஆகியோர் மேற்கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருண்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.