சித்திரை திருவிழா: கள்ளழகர் 496 மண்டபங்களில் எழுந்தருள்கிறார்
அடுத்த மாதம் 8-ந் தேதி அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.;
அழகர்கோவில்,
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் மதுரை சித்திரை பெருந்திருவிழாவும் ஒன்றாகும். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதை தொடர்ந்து வருகிற 27-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மங்கள இசையுடன் முகூர்த்தக்கால் அதே கோவில் முன்பு ஊன்றப்படும்.
அடுத்த மாதம் 8-ந் தேதி அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 10-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். 11-ந் தேதி மதுரை மூன்று மாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழகரை வரவேற்கிறார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். முன்னதாக 496 மண்டபங்களில் அழகர் இந்தாண்டு எழுந்தருள்கிறார்.
13-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா. 15-ந்தேதி காலையில் அழகர்மலைக்கு பிரியா விடை பெற்று கள்ளழகர் திரும்புகிறார். 16-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் அழகர்கோவில் வந்து இருப்பிடம் சேர்கிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன், மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.