கோவை: இறந்த 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு - பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

இறந்த 45 தெருநாய்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து, எல்.எப்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.;

Update:2025-09-26 03:45 IST

கோவை,

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 1 லட்சத்து 11 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. தெருநாய்களிடையே ரேபிஸ் (வெறிநாய்கடி நோய்) ஒழிப்பை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ரேபிஸ் கண்காணிப்பு ஹெல்ப்லைனும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பல்வேறு உடல்நல பிரச்சினைகள் உள்ள 49 தெருநாய்கள் கோவை மாநகராட்சியில் 14 ஹாட்ஸ்பாட்களில் இருந்தும், புறநகர் பகுதிகளில் இருந்தும் பிடிக்கப்பட்டன. இதில் 4 தெருநாய்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 45 தெருநாய்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. அந்த தெருநாய்கள் இறந்து போயின.

இறந்த 45 தெருநாய்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து, ரேபிஸ் நோய் இருந்ததா? என கண்டறிய எல்.எப்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மற்றொரு சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டது. இதில் 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சி தகவல் மூலம் கோவையில் ரேபிஸ் பாதிப்புள்ள தெருநாய்கள் சுற்றி வருவது உறுதியாகி உள்ளதுடன், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்