பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் - அரசாணை வெளியீடு
நீர்நிலைகளின் காவலன் என்று பனைமரம் அழைக்கப்படுகிறது.;
சென்னை,
பனை மரங்களை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியமானது. பனைமரங்கள் வறட்சியை தாங்கி வலுவாக நிற்பதுடன், பனை வெள்ளம், பாய் உள்ளிட்ட பல பொருட்களை தந்து, விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிலச்சரிவை தடுப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தநிலையில், பனை மரத்தை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,
* பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம்
*தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் கலெக்டர் அனுமதி பெறுவது கட்டாயம்
* பனை மரங்களை வெட்ட 'உழவர் செயலி'யில் விண்ணப்பிக்க வேண்டும்
* வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அனுமதி கடிதம் காட்டாயம்
* நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனைமரங்களை பாதுகாக்கும் நோக்கில், சட்டசபையில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். மேலும் பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.