நல்லகண்ணுவை நேரில் சந்திக்க வருவதை தவிர்க்குமாறு இந்திய கம்யூ. வேண்டுகோள்

நல்லகண்ணுவை பார்க்க மருத்துவமனைக்கு நேரில் செல்வதை தவிர்க்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.;

Update:2025-08-25 18:23 IST

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்திக்க வருவதை தவிர்க்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு நேற்று இரவு சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு தீவிரச் சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காபி அருந்தும்போது பொறையேறிதால், சற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் தோழர் இரா.நல்லகண்ணு உடல்நிலை சீராகி இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பி, முன்னேற்றம் கண்டு வருகின்றது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் ஜி.ஆர். ரவீந்தரநாத், ஏ.ஆர்.சாந்தி, தோழர் ஆர்.என்.கே. மகள் மருத்துவர் ஆண்டாள் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

இன்று (25.08.2025) காலையில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மருத்துவமனை சென்று நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, மே 17 இயக்கப் பொதுச் செயலாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்துள்ளனர்.

இன்னும் இரண்டொரு நாட்களில் நல்லகண்ணு உடல்நலம் பரிபூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கூறும் மருத்துவர்கள், தற்போது அவரை நேரில் காண்பதற்கு சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேரில் வருவதை தவிர்த்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என்பதை அனைவரின் கவனத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தோழர்கள், நண்பர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு நேரில் செல்வதை தவிர்த்து உதவுமாறு மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்