திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி பாட்டு கேட்க வைத்திருந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.;
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 90). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனால் பொழுதை போக்குவதற்கு ரூ.700 மதிப்பிலான ரேடியோ ஒன்றை வாங்கினார்.
அதில் தினமும் எப்.எம். வைத்து பாட்டு கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஆதிலட்சுமி புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனுக்கொடுத்தார். அதில் ரேடியோவை கண்டுபிடித்து தர வேண்டும். தனக்கு ரேடியோவில் பாட்டு கேட்காமல் ஏதோ இழந்தது போன்று உள்ளது. பொழுதை போக்க முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஹலோ எப்.எம். சார்பில் ஆதிலட்சுமிக்கு நேற்று புதிய ரேடியோ வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.