தொடர் மழை.. அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை
கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.;
நெல்லை,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் லோயர் கேம்ப் வழியாக வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீரானது அகஸ்தியர் அருவிக்கு வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் பக்கவாட்டிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மணிமுத்தாறு அருவியிலும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.