அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - தோழி அதிரடி கைது... பரபரப்பு தகவல்கள்
தப்பியோடிய கள்ளக்காதலி மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி முதலியார்பேட்டை பாப்பன்சாவடியை சேர்ந்தவர் பிரகாஷ் (38 வயது). இவர் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இதற்காக தனியாக நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். புதுச்சேரியில் கழிவுநீரகற்றும் பணியிலும் ஈடுபட்டார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
குடும்பத்தகராறில் இவரது மனைவி 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (37 வயது) என்ற பெண்ணுடன் பிரகாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. சுகன்யா, பிரகாசின் காண்டிராக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுகன்யாவும் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார்.
இதனால் பிரகாசும், சுகன்யாவும் தங்களது திருமண பந்தங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை மீறி தனியாக உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். பிரகாஷ் எங்கு சென்றாலும் சுகன்யாவை தன்னுடன் அழைத்து செல்வார். நேற்று முன்தினம் கழிவுநீரை அகற்றும் பணிக்காக வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய பிரகாஷ் தனது காரில் சென்னை வந்தார். அவருடன் சுகன்யாவும் வந்தார்.
சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் தனியாக வாழ்ந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுகன்யாவின் நெருங்கிய தோழியும், உறவுப்பெண்ணுமான குணசுந்தரி (27) ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்.
பிரிந்து வாழ்ந்தாலும் மனைவி சுகன்யாவை மறக்க முடியாமல் தனஞ்செழியன் தவித்து வந்தார். தனது மனைவி குறித்த தகவல்களை அவரது தோழியான குணசுந்தரியிடம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வார். நேற்று முன்தினம் சுகன்யா தனது கள்ளக்காதலன் பிரகாசுடன் சென்னை வருவதை தனஞ்செழியனுக்கு குணசுந்தரி தெரிவித்தார்.
மேலும் சுகன்யாவுடன் தொடர்பு கொண்ட குணசுந்தரி நாம் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடலாம் என்று அழைத்தார். அதன்பேரில் சுகன்யா சென்னை வந்தவுடன் குணசுந்தரிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை அசோக்நகர் 4-வது அவென்யூவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சாப்பிட்டனர். இந்த தகவலை குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்தார்.
மனைவியை மறக்க முடியாமல் தவித்த தனஞ்செழியன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு பைக்கில் வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். பிரகாஷ், சுகன்யா, குணசுந்தரி ஆகியோர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். பிரகாசும், சுகன்யாவும் காரில் ஏறினார்கள். அப்போது கையில் கத்தியுடன் வந்த தனஞ்செழியன் திடீரென்று காரில் உட்கார்ந்திருந்த பிரகாசை தாக்கினார்.
‘சீட் பெல்ட்' அணிந்திருந்ததால் பிரகாசால் தப்பியோட முடியவில்லை. இந்த நிலையில் பிரகாசை சரமாரியாக கத்தியால் குத்திய தனஞ்செழியன் மனைவி சுகன்யாவையும் மிரட்டினார். சுகன்யாவையும் தீர்த்துக்கட்ட தனஞ்செழியன் முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி தனது பைக்கில் ஏற சொல்லி அழைத்து சென்றுவிட்டார்.
குணசுந்தரியும் மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அசோக்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பிச்சென்ற தனஞ்செழியனை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரீன் தலைமையிலான தனிப்படை போலீசார் தனஞ்செழியனை தேடிவந்தனர். அவர் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டார்.
தனஞ்செழியனின் மனைவி சுகன்யாவையும், அவரது தோழி குணசுந்தரியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் பிரகாஷ் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் கருதினார்கள். பிரகாசை தனஞ்செழியன் கத்தியால் குத்தியபோது அவரை காப்பாற்ற இருவரும் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக சுகன்யா தனது கணவரோடு பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.
குணசுந்தரி தனியாக தனது மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். பிரகாசை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. அதை செய்யாமல் போலீசுக்கும் இந்த சம்பவம் பற்றி தகவல் கொடுக்காமல் தப்பிச்சென்றதால் சுகன்யாவையும், குணசுந்தரியையும் இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளாக சேர்த்தனர்.
அதையொட்டி அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான தனஞ்செழியன், சுகன்யா, குணசுந்தரி ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.