தொடர் மழையால் தென்காசி மாவட்டத்தில் நிரம்பி வழியும் அணைகள்

தொடர் மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.;

Update:2025-11-25 10:30 IST

தென்காசி,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

சேர்வலாறு அணையில் இருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய மதகு வழியாக 1,600 கனஅடி நீர், 500 கன அடி உபரி நீர், காட்டாற்று வெள்ளம் 500 கன அடி என லோயர் கேம்ப் வழியாக வினாடிக்கு சுமார் 2700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

செங்கோட்டை அருகே கண்ணுப்புள்ளிமெட்டு பகுதியில் உள்ள குண்டாறு அணை (36.10 அடி கொள்ளளவு) நேற்று மதியம் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் 5-வது முறையாக அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அதேபோல் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை (72 அடி கொள்ளளவு) முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணைக்கு வரும் 200 கன அடி தண்ணீர் அப்படியே கருப்பாநதி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராமநதி அணை (84 அடி கொள்ளளவு) நீர்மட்டம் நேற்று காலையில் 82 அடியை எட்டி உள்ளது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணைக்கு வரக்கூடிய சுமார் 200 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் அடவிநயினார் அணை (132 அடி கொள்ளளவு) நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் 185 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை (85 அடி கொள்ளளவு) நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து சுமார் 1,300 கன அடியாக உள்ளதால், அணையில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த உபரி நீரானது ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், அடைச்சாணி, திருப்புடைமருதூர் வழியாக முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்