திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா? - நீதிபதி அதிருப்தி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபமண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.;
மதுரை,
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், அந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு பதிலாக பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்மூலம் பாரம்பரிய வழக்கத்தை தவிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பான உத்தரவை ரத்து செய்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
கடந்த வாரம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி, நேரில் ஆய்வு செய்திருந்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள சிக்கந்தர் தர்கா சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் வக்பு வாரியத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றார்.
பின்னர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், 1947-ம் ஆண்டு ஒரு வழிபாட்டுத்தலம் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். எனவே ஏற்கனவே எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதோ, அதே இடத்தில் ஏற்றுவது அவசியம். இது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார்கள்.
மற்றொரு தரப்பு வக்கீல்கள், தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த விவகாரம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது என்றனர். அதற்கு நீதிபதி, தேர்தலுக்கும், இந்த விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லையே என்றார். இன்னொரு தரப்பு வக்கீல்கள் வாதிடும்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியானது தர்காவை சேர்ந்ததுதான் என்று தெரிவித்து இருந்தனர்.
அதற்கு, அங்கு பல்வேறு உச்சிகள் இருக்கிறதே, எந்த உச்சி என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்? என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். விசாரணை முடிவில் இந்த வழக்கில் வக்பு வாரியத்தை எதிர்தரப்பாக சேர்ப்பதாகவும், அவர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் உரிய பதிலை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.