ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்

மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.;

Update:2025-11-25 08:00 IST

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன். இவருடைய மனைவி நாகியம்மாள் (வயது 69). இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஆற்று கால்வாய் ஓரத்தில் மாடுகள் மேய்க்க சென்றார்.

இதற்கிடையில் மதியம் 1.30 மணியளவில் அங்குள்ள புதர்களுக்கு இடையே பெண் ஒருவரை புலி ஒன்று கவ்வி செல்வதை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஊருக்குள் ஓடிச்சென்று தான் கண்ட காட்சியை பொதுமக்களிடம் கூறினார்

Advertising
Advertising

அதே சமயத்தில், மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற நாகியம்மாளையும் காணவில்லை. இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர், போலீசாரை வரவழைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அங்குள்ள புதர் மறைவில் புலி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. அருகில் சென்றபோது, புலி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

உடனே புதருக்குள் சென்று பார்த்தனர். அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாகியம்மாள் பிணமாக கிடந்தார். அவரை புலி அடித்துக்கொன்று உள்ளது.

பின்னர் நாகியம்மாளின் உடலை போலீசார் மற்றும் வனத்துறையினர் மீட்டு அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். அதை தடுத்த பொதுமக்கள் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், முதற்கட்டமாக கேமராக்கள் பொருத்தி புலி நடமாட்டம் கண்காணிக்கப்படும், அதன்பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் 20 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்