மதுவை கீழே கொட்டிய மகள்... விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி மதுபாட்டிலை பீரோவில் மறைத்து வைத்துள்ளார். அவரது மகள் அதை எடுத்து மதுவை கீழே ஊற்றியுள்ளார்.;

Update:2025-10-22 09:14 IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஆலங்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (49 வயது), கட்டிட தொழிலாளி. இவருக்கு அகிலா (47 வயது) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது ராஜேந்திரன் குடும்பத்துடன் அம்மாண்டிவிளை அருகே மூங்கில்விளையில் வசித்து வருகிறார். ராஜேந்திரனுக்கு மது பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் அவர், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று திங்கள்சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வாங்கி வந்த ஒரு மதுபாட்டிலை வீட்டில் உள்ள பீரோவில் மறைத்து வைத்துள்ளார். இதைபார்த்த அவரது மகள் பாட்டிலை எடுத்து வெளியே வந்து மதுவை கீழே ஊற்றியுள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன், வீட்டில் இருந்த செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி அகிலா கொடுத்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்