நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை 50 முதல் 300 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-11-05 17:26 IST

கோப்புப்படம் 

நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வருகிற 10-ம்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடிநீர் கட்டணத்தை 50 முதல் 300 சதவீதம் வரை உயர்த்தவும், பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது.

அதன்படி குடிநீர் கட்டணமாக, 600 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகளுக்கு ரூ.120-ம், வணிகம் சார்ந்த கட்டடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கட்டடங்களுக்கு ரூ.360-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல 600 - 1,200 சதுர அடி, 1,200 - 1,800 சதுர அடி, 1,800 - 3,500 சதுர அடி, 3,500 - 5,000 சதுர அடி, 5,000 - 10 ஆயிரம் சதுர அடி மற்றும் 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு என தனித்தனியாக பரப்பளவு அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல, பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகை ரூ.5 ஆயிரமாக இருந்த நிலையில் கட்டடங்களின் பரப்பளவின் அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட உள்ளது. அதன்படி 600 சதுர அடி வரை உள்ள கட்டடங்களுக்கு ரூ.7,500-ம், வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு ரூ.10 ஆயிரமும், தொழில் நிறுவனங்களின் கட்டடங்களுக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1,200 சதுர அடி வரை உள்ள கட்டடங்களுக்கு ரூ.10 ஆயிரமும், 1,800 சதுர அடிக்கு ரூ.12,500 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருகிற 10-ம் தேதி இதுதொடர்பான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்று இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்