வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட தேவரின் தங்கக்கவசம்: பசும்பொன் கொண்டு சென்று சிலைக்கு அணிவிப்பு

தேவரின் தங்கக்கவசம், பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு சென்று, சிலைக்கு அணிவிக்கப்பட்டது.;

Update:2025-10-25 01:23 IST

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

அந்த தங்கக்கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வங்கியில் இருந்து தங்கக்கவசத்தை அ.தி.மு.க. பொருளாளர் கையெழுத்து போட்டு எடுத்துக்கொடுப்பது வழக்கம்.

தங்கக்கவசம்

இந்தாண்டுக்கான தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு தங்கக்கவசத்தை வங்கியில் எடுப்பதற்காக அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேற்று வந்தனர்.

அங்கு அதிகாரிகள் முன்னிலையில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் சார்பில் காந்தி மீனாளும் கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்கக்கவசம் பசும்பொன்னுக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. விழா முடிந்த பின்னர் மீண்டும் தங்கக்கவசம் வங்கியில் ஒப்படைக்கப்படும்.

முன்னதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு, மக்களின் கோரிக்கையை ஏற்று 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை ஜெயலலிதா வழங்கினார்.

தெய்வீகத்தையும், தேசியத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த தேவரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவரது உத்தரவின்படி அ.தி.மு.க. நிர்வாகிகளாகிய நாங்கள் அனைவரும் வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை எடுத்து தற்போது குருபூஜைக்காக வழங்கி உள்ளோம், என்றார்.

அப்போது பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மருத்துவர் அணி இணை செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, செல்வகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

அங்கு நடந்த பூஜையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கிருத்திகா முனியசாமி, கமுதி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.காளிமுத்து ராஜேந்திரன், கருமலையான், எஸ்.டி.செந்தில்குமார், முனியசாமிபாண்டியன், பம்மனேந்தல் சேகரன், மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்,

துணை ஜனாதிபதி, முதல்-அமைச்சர்

வருகிற 30-ந் தேதி நடக்கும் தேவர் குருபூஜையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சீமான், செல்வப்பெருந்தகை, வைகோ,ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்