சாய்ந்த நிலையில் இருந்த விழிப்புணர்வு பதாகைகள் சீரமைப்பு
பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அருள்புரம் அருகே விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் இருந்தது.;
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அருள்புரம் அருகே விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் இருந்தது.
மேலும் கரைப்புதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மதி சிறகுகள் தொழில் மையம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதன்காரணமாக அந்த விழிப்புணர்வு பதாகைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் இதை பற்றிய செய்தி 'தினத்தந்தி'யில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக உடனடியாக இரண்டு விழிப்புணர்வு பதாகைகளும் சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டி நன்றி தெரிவித்து உள்ளனர்.