தினத்தந்தி' செய்தி எதிரொலி: அபாய நிழற்குடையின் அச்சம் நீங்கியது
சேதமடைந்த நிழற்குடை அகற்றப்பட்டு அச்சம் நீங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
திருப்பூர் காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பாக பயணிகள் நிழற்குடை இருந்தது. சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். முக்கியமான பகுதியில் நிழற்குடை இருப்பதால் தினமும் ஏராளமானோர் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் நிழற்குடையை தாங்கும் இரும்பு கம்பிகள் சேதமடைந்ததால் நிழற்குடை மிகவும் சாய்ந்து காணப்பட்டது.
ஆனால் இதன் ஆபத்தை உணராமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், பொதுமக்களும் நிழற்குடையின் உள்ளே அமர்ந்து வந்தனர்.எப்போது வேண்டுமானாலும் விழும் வகையில் ஊசலாடிய நிழற்குடையின் விபரீதம் குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக செய்தி வெளியான நாளிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேதமடைந்த நிழற்குடை அகற்றப்பட்டு அச்சம் நீங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே இடத்தில் புதியநிழற்குடை விரைவில் அமைக்கப்பட உள்ளது.