நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
சிலையின் கல்வெட்டில் சாமி நாகப்பன் என குறிப்பிடுவது சரியல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
“பாட்டாளி மக்கள் கட்சியின் பத்தாண்டு காலத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு மயிலாடுதுறையில், விடுதலைப் போராட்ட தியாகியும், காந்தியடிகளின் தோழருமான சாமி நாகப்ப படையாட்சியாரின் உருவச் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அதற்கான விழாவிற்காக அமைக்கப்பட்ட பதாகையில் அவரது பெயர் சாமி நாகப்பன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா என உலகம் முழுவதும் அறியப்பட்ட சாமி நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கும், இனவெறிக்கும் எதிராகப் போராடி உயிர்நீத்த முதல் இந்தியரான சாமி நாகப்ப படையாட்சிக்கு மயிலாடுதுறையில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் அவருக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் அளிக்க திமுக அரசு மறுத்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலை ஏற்று 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சென்னைக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விடுதலைக்காக போராடிய தலைவர்களின் பட்டியலில் மாயூரம் நாகப்பப் படையாட்சியாரின் பெயரையும் குறிப்பிட்டு மரியாதை செலுத்தினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளாக கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றிய இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகப்பப் படையாட்சியாரின் பெயரை உச்சரிப்பதையே திட்டமிட்டு தவிர்த்து விட்டார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால் தான் வேறு வழியின்றி மயிலாடுதுறையில் சாமி நாகப்ப படையாட்சியாருக்கு மணிமண்டபம் இல்லாமல் வெறும் சிலை மட்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று மயிலாடுதுறையில் அதிகாரிகளால் நடத்தப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவிற்கான பதாகையில் சாமி நாகப்பப் படையாட்சியாரின் பெயர் வெறுமே சாமி நாகப்பன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக செய்தி விளம்பரத் துறை அதிகாரிகளிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் முறையிட்ட போது, சிலையின் பீடத்தில் அமைக்கப்படவுள்ள கல்வெட்டிலும் அவரது பெயர் சாமி நாகப்பன் என்று மட்டுமே இடம் பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடுதலைப் போராட்டத் தியாகி சாமி நாகப்பப் படையாட்சியாரின் அடையாளத்தை திட்டமிட்டு அழிக்கும் சதி ஆகும். திமுக அரசின் இந்த சதித் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒரு போதும் அனுமதிக்கவே அனுமதிக்காது.
சாமி நாகப்ப படையாட்சியார் சாதாரணமானவர் அல்ல; அவர் செய்த தியாகம் அளவிட முடியாதது. 1906ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசு (தற்போது தென் ஆப்பிரிக்கா) அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசிடம் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் இந்தியர்களை துன்புறுத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, இந்தியர்கள் அதனை எதிர்க்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஏசியாடிக் பதிவு சட்டத்தை எதிர்த்து போராடிய சாமி நாகப்பன் படையாட்சியார் 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அவர், விடுதலையான ஆறாம் நாள், ஜூலை 6-ஆம் தேதி உயிரிழந்தார். சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியாரின் வீரமரணம் மகாத்மா காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் வெவ்வேறு காலகட்டங்களில் தமது மகன் சிறை சென்றதையும், தமது சகோதரர் இறந்ததையும் சுட்டிக்காட்டிய காந்தியடிகள், எனினும் நாகப்பன் படையாட்சியாரின் உயிரிழப்பு ஏற்படுத்திய வலியுடன் ஒப்பிடும்போது இவை பெரிதல்ல என்று கூறினார். நாகப்பன் படையாட்சியாரின் தியாகத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிவு செய்த காந்தியடிகள், 1914ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் முன் தமது கடைசி நிகழ்ச்சியாக ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்போன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார். இவ்வளவு சிறப்பும், பெருமையும் மிக்க தியாகியின் சிலை அவருக்குரிய முழுமையான அடையாளங்களுடன் தான் அமைக்கப்பட வேண்டும்.
சாமி நாகப்ப படையாட்சியார் இந்தியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் சாமி நாகப்ப படையாட்சியார் என்ற பெயரில் தான் அறியப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் அவர் சிறை தண்டனை அனுபவித்த கான்ஸ்டிடியூஷன் ஹில் சிறைச்சாலை இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அவரைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பலகையில் அவரது பெயர் சாமி நாகப்பப் படையாட்சி என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது சிலையின் கல்வெட்டில் சாமி நாகப்பன் என குறிப்பிடுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்தாமல், சாதியை ஒழிக்கப் போவதாக முடிவு செய்திருக்கும் திமுக அரசு, அதே தத்துவத்தை சாமி நாகப்ப படையாட்சியாரின் சிலைக்கு பெயரிடுவதில் பொருத்திப் பார்க்க முடியாது. கோவை பாலத்திற்கு எவ்வாறு அனைவராலும் அறியப்பட்ட ஜி.டி.நாயுடு அவர்களின் பெயர் எந்த மாற்றமும் செய்யாமல் சூட்டப்பட்டதோ, அதேபோல் சாமி நாகப்ப படையாட்சியாரின் சிலை கல்வெட்டிலும் தென்னாப்பிரிக்க அருங்காட்சியகத்திலும், 2019, 2020-ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாக்களின் முதலமைச்சர் உரையிலும் எவ்வாறு இடம் பெற்றிருந்ததோ, அதேபோல் சாமி நாகப்ப படையாட்சியார் என்றே குறிப்பிடப்பட வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.