அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நமது பாரதப் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலனைக் கைது செய்யாமல் திமுக அரசு இழுத்தடித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
அதிலும், ஜெயபாலனைக் கைது செய்ய வலியுறுத்தி தென்காசி, சங்கரன்கோவில், நாகர்கோவில், தூத்துக்குடி, தேனி, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, வேலூர் என மாவட்ட வித்தியாசமின்றி தமிழகம் முழுவதும் நமது பாஜக சொந்தங்கள் மனு கொடுத்தும், எப்.ஐ.ஆர். கூட பதியப்படாமல் இருப்பது காவல்துறை திமுக அரசின் ஏவல்துறையாகவே மாறிவிட்டதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
ஒரு நாட்டை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவருக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து பத்து நாட்களுக்கு மேலாகியும், கைது செய்யாமல் காலந்தாழ்த்துவது தான் தேசப் பாதுகாப்பில் திமுக அரசு காட்டும் அக்கறையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி பிரதமரின் பாதுகாப்பை விட மேலோங்கிவிட்டதா?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு துளியளவும் இருப்பது உறுதியானால் உடனடியாகப் பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியின் மீது காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! அல்லது கட்சி சார்போடு செயல்படும் பாசிச திமுக அரசை எதிர்த்து, தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கத் தமிழக பாஜக தயங்காது என எச்சரிக்கிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.