இந்து விரோதக் கொள்கையை திமுக அரசு கைவிட வேண்டும்: எச்.ராஜா
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இந்துக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரவேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.;
மதுரை,
மதுரை விமான நிலையத்தில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் நாளுக்கு நாள் அராஜகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திமுகவினர் போலியானவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு, பழனியில் முருகனுக்கு நடந்த மாநாடு தான். சனாதன இந்து தர்மத்தை மலேரியா கொசு போன்று அடிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதற்காகவே அந்த மாநாடு நடந்தது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில், 1931 லண்டன் தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நவாஸ்கனி, அப்துல்சமத் போன்றவர்கள், திருப்பரங்குன்றத்தில் தர்காவிற்கு வருவதாக கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் இந்துக்களுக்குத்தான் அந்த மலை சொந்தம். மத நல்லிணக்கம் விரும்புபவர்கள், இந்து-முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். அதில் என்ன தவறு இருக்கிறது. அயோத்தியிலும், இதை போல் தான் ஆராய்ச்சி அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் ஆண்டாண்டு காலமாக அபகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்து விரோதக் கொள்கையை திமுக அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் 2026-ல் மக்கள் அதற்கு பதில் சொல்வார்கள். ஈ.வே.ரா.வின் பெயரை சொல்பவர்கள் தமிழை விரும்புபவர்களாக இருக்க முடியாது.
இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இந்துக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரவேண்டும். இந்து முன்னணியின் தலைமை அழைத்தால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன். மத்திய பட்ஜெட் குறித்து கனிமொழி எம்.பி. கூறும் கருத்துகள், ஏற்புடையதல்ல. பட்ஜெட்டில் அறிவித்துள்ள பயன்களை பெறுபவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்"இவ்வாறு அவர் கூறினார்.