நடிகர் விஜய் டெல்லி சென்று திரும்பிய சொகுசு விமானத்தின் வாடகை எவ்வளவு தெரியுமா?
தனியார் சொகுசு விமானத்தில் நேற்று காலை டெல்லி சென்ற நடிகர் விஜய், இன்று மதியம் சென்னை திரும்பினார்.;
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., சம்பவ இடத்திலும், தவெக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், விஜய்யிடமும் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை டெல்லி அழைத்திருந்தனர். அதன் அடிப்படையில், தனியார் சொகுசு விமானத்தில் நேற்று காலை டெல்லி சென்ற நடிகர் விஜய், இன்று மதியம் சென்னை திரும்பினார்.
நடிகர் விஜய் பயணம் செய்த சொகுசு விமானம் பிளை எஸ்பிஎஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. எம்ப்ரேர் லெகசி 600 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் சுமார் 13 பேர் பயணம் செய்யலாம்.
ஏற்கனவே அவர் தமிழகத்தில் பிரசார பயணத்திற்காக சென்றபோதும் இதுபோன்ற விமானத்தை பயன்படுத்தினார் என்றாலும், இது நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய விமானம் ஆகும். 5500 கி.மீ. தூரம் வரை தரையிறங்காமல் பயணிக்க முடியும். 41 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் அளவு திறன் பெற்றது.
விமானத்தின் உள்ளேயும் இருக்கை வசதிகள் சாதாரணமாக இல்லாமல், ஷோபா வடிவில் இருக்கும். இந்த சொகுசு விமானத்திற்கு ஒரு மணி நேர வாடகை ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என்று கூறப்படுகிறது. இதுபோக, இந்த விமானம் தரையிறங்கும் விமான நிலைய கட்டணத்தையும் நடிகர் விஜய்யே ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். அந்த வகையில், நடிகர் விஜய்யின் டெல்லி பயணத்திற்கு விமான வாடகைக்கு மட்டும் சுமார் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.