கரூர் நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி

தேவை ஏற்பட்டால் விஜய் மீண்டும் அடுத்த வாரம் ஆஜராவார் என்று சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.;

Update:2026-01-13 14:01 IST

சென்னை,

கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் நேற்று சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த 6 ஆம் தேதி சிபிஐ சம்மன் விடுத்த நிலையில், அதனை ஏற்று விஜய் நேற்று ஆஜரானர். விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. விஜய்யிடம் அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. நேற்று டெல்லியிலே தங்கிய விஜய், இன்று காலை தனி விமானத்தில் சென்னை வந்தார். இந்த நிலையில், தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் என்ன நடைபெற்றது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். கரூர் விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் விஜய் மீண்டும் அடுத்த வாரம் ஆஜராவார். சிபிஐ முன்பு விஜய் தேவையான விளக்கம் அளித்தார்.

 கூட்ட நெரிசலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளறுபடி இருந்தும், குடும்பத்தினரிடம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தாலும் எங்கள் பழைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் கடைசி படம். பிரச்சினையின்றி அந்த படம் வெளியே வர விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். ஜனநாயகன் படம் வெளியான பிறகு அது தொடர்பாக கருத்து தெரிவிக்கப்படும்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்