29 ஆபாச வீடியோ... குறுஞ்செய்தி: போலீஸ்காரர் மீது இளம்பெண் பாலியல் புகார்

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.;

Update:2026-01-13 13:14 IST

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனு குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 2023-ம் ஆண்டு எனது கணவர் ஒரு புகார் அளிப்பதற்காக புளியங்குடி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் எனது கணவரின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.

அதில் இருந்து எனது செல்போன் எண்ணை எடுத்துக்கொண்டு, எனக்கு திடீரென 29 ஆபாச வீடியோக்கள் அனுப்பினார். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் 2024-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் புகார் வாங்க மறுத்ததோடு எனது கணவரை மிரட்டினர். கடந்த 11.12.2025 அன்றும் எனது செல்போன் எண்ணிற்கு மீண்டும் போலீஸ்காரர் ஆபாச வீடியோ அனுப்பினார். அவை அனைத்தையும் தற்போது நான் ‘ஸ்கிரீன் ஷாட்’ ஆதாரமாக எடுத்து வைத்துள்ளேன்.

அவை அனைத்தையும் பதிவு செய்து மேலதிகாரிகளுக்கு பதிவு தபால் மூலம் அனுப்பினேன். ஆனாலும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கமல்கிஷோர், இதுகுறித்து உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்