நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு விரைவில் முட்டை ஏற்றுமதி
நாமக்கல்லில் கோழி பண்ணையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல்,
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டலம் சார்பில் நாமக்கல்லில் கோழி பண்ணையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே நாமக்கல் மண்டலத்தில்தான் தற்போது முட்டைக்கு அதிகமான விலை கிடைத்து வருகிறது. இந்தியாவிலேயே முட்டை ஏற்றுமதியில் முதன்மையாக திகழும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதியாகிறது. வழக்கமாக அரபு நாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.