வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் - மின்வாரிய அலுவலர் கைது
புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.;
திருநின்றவூர்,
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை சபி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவர் திருநின்றவூர் அருகே ஏ.என்.எஸ். நகரில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு சங்கர் திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்காக அரசு நிர்ணயித்த தொகையையும் கட்டியுள்ளார்.
இந்த நிலையில் திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ரஜினி (41) என்பவர் சங்கர் புதிதாக கட்டிய வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வேலை சம்பந்தமாக சங்கர் டெல்லிக்கு சென்று விட்டார். சங்கர் வீட்டிற்கு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. டெல்லியில் இருந்து சங்கர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அதை அறிந்த ரஜினி, சங்கருக்கு போன் செய்து ரூ.3 ஆயிரம் லஞ்ச பணம் கேட்டேனே? இன்னும் தரவில்லையே? என கேட்டுள்ளார். இதுகுறித்து சங்கர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து சங்கரிடம் ரூ.3 ஆயிரம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். சங்கர் அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் ரஜினியிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.