என்ஜினீயரிங் கலந்தாய்வு; அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின
என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.;
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிக அளவில் சேர வேண்டும் என்ற நோக்கில், மருத்துவப் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல, என்ஜினீயரிங் படிப்பிலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு 2021-22-ம் கல்வியாண்டில் அளிக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டதில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து வருகிறார்கள். இதில் சேரும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்பதாலும், பெற்றோருக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் உயர்கல்வியை தொடர முடியும் என்பதாலும் ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் சேருகின்றனர்.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மொத்தம் உள்ள படிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 13,886 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த இடங்களுக்காக 46,848 பேர் விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்தனர். இதனால் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு கடும் போட்டிக்கு மத்தியிலேயே தொடங்கியது.
கலந்தாய்வு கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் 2,662 பேர் பங்கேற்று 2,177 பேருக்கு இடம் கிடைத்தன. 2-வது சுற்றில் 16,259 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 9,608 பேர் இடங்களை பெற்றனர். 3-வது சுற்றில் 27,927 பேருக்கு அழைப்பு விடுத்ததில் 2,096 பேர் இடங்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது.
ஆக என்ஜினீயரிங் கலந்தாய்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வெறும் 5 இடங்கள் மட்டுமே மிச்சம் உள்ளன. மற்றபடி அனைத்து இடங்களும் அதாவது 13,881 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் உள்ள இந்த 5 இடமும் ஏற்கனவே இடங்களை உறுதி செய்து காத்திருப்பவர்களாலோ அல்லது துணை கலந்தாய்வில் பங்கேற்பவர்களாலோ நிரப்பப்பட்டுவிடும்.
என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு என மொத்தம் 1,86,475 இடங்கள் இருக்கின்றன. 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 92,423 இடங்கள் நிரம்பி இருந்தன. இதனைத்தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கலந்தாய்வில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களில் 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் அதனை உறுதி செய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) மாலை வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 3-வது சுற்று கலந்தாய்வு வருகிற 20-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளது.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களில் பெரும்பாலானோர் இடங்களை உறுதி செய்துவிடுவார்கள். அந்தவகையில் மொத்தம் 1,57,052 இடங்கள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் தற்போது 29,423 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் துணை கலந்தாய்வு மூலம் சில இடங்கள் நிரப்பப்படும்.