ஈரோடு: பங்குச்சந்தையில் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் செந்தமிழ் செல்வன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோடு,
ஈரோடு கைக்காட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 34). ஐ.டி நிறுவன ஊழியர். இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு குழந்தை இல்லை. செந்தமிழ் செல்வன் வீட்டில் இருந்தபடி தனியார் நிறுவனம் கொடுக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
மேலும் இவர் தனக்கு தெரிந்த பலரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இதில் பல லட்ச ரூபாயை செந்தமிழ் செல்வன் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செந்தமிழ் செல்வன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கு மனைவி லலிதா ஆறுதல் கூறி வந்தார்.
எனினும் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் மிகுந்த மனவேதனையில் இருந்த செந்தமிழ் செல்வன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தமிழ் செல்வன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பங்குச்சத்தையில் இழந்த தொகை எவ்வளவு எனவும் விசாரணை நடந்து வருகிறது.