தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை, காவல் நிலையமும் பாதுகாப்பாக இல்லை - ஜி.கே.வாசன்

காவல்துறையினரே கொலை செய்யப்படக்கூடிய சூழலில் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;

Update:2025-08-08 09:31 IST

கோப்புப்படம்

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பதையே அன்றாட குற்றச்செயல்கள் வெளிப்படுத்துகின்றன. நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கிற்கு சவாலான குற்றச்செயல்கள் நீடிக்கிறது. உடுமலைப்பேட்டை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

குடிபோதையில் ரகளை செய்தவர்களை விசாரிக்கச் சென்ற போது கொலை நடந்துள்ளது. தமிழக அரசு கொலையாளிகளை கைது செய்வதோடு, அவர்களுக்கு உரிய தண்டனையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும். பணி சம்பந்தமாக சென்ற ஒரு காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கும்.

இந்த கொலைக்கு போதைப்பொருளும் காரணம் என்றால் அதை முழுமையாக ஒழிக்க முடியாமல் அரசும் திணறி, காவல் துறையினரும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாமல் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கில் முழுக்கவனம் செலுத்தாமல், முறையான ஆட்சி செய்யாமல், மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே கொலை செய்யப்படக்கூடிய சூழலில் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது.

மேலும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் இருந்த அந்த நபர் மன அழுத்தத்தில் இருந்தார் என்று கூறுவதும், தூக்கு போட்டுக்கொண்டார் என்று தெரிவிப்பதும் எந்த விதத்தில் நியாயம். இந்த சம்பவத்திற்கும் காரணம் ஒரு விதத்தில் போதைப்பொருள் தான்.

காவல் நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் காவல் நிலையத்தில் எப்போதும் காவலர் பணியில் இருந்து காவல் நிலையத்தை பாதுகாக்க வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பது தமிழக சட்டம் ஒழுங்கில் பிரச்சனை இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே தமிழக அரசு போதைப்பொருளை முழுமையாக ஒழிக்கவும், காவல் நிலையத்தை முறையாக கண்காணித்து காவல் நிலையத்தைப் பாதுகாக்கவும், காவல் துறையினர் பணியில் கவனமுடன் இருக்கவும், காவல் துறையினருக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு இருப்பதற்கும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்