வாகனங்களுக்கான பேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் கே.எல்.07.டிஜி.007 என்ற எண் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் போனது.;

Update:2025-08-31 17:37 IST

கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் புதிய வாகனங்களை வாங்குவோர் தங்களுக்கு பிடித்தமான அல்லது அதிர்ஷ்ட எண்கள் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக சிறப்பு எண்கள் (பேன்சி எண்) வாங்கி கொள்வர். இதற்கான, முந்தைய நடைமுறையாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைத்து தங்களுக்கு தேவையான எண்களை கொண்ட அரசாணை பெறப்பட்ட பின் மீண்டும் வட்டார போக்குவரத்து அதிகாரியின் ஒப்புதலுடன் ரூ.40 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தி அந்த சிறப்பு எண்களை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது, இந்த நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களை போல தங்களுக்கு விருப்பமான எண்களை தேர்வு செய்ய ஏலம் எடுக்கும் அறிவிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான சிறப்பு எண்களை வாங்குவதற்கு ஏல முறை மாற்றப்பட்டுள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு (எ.கா: 0001, 9999, 7777) இ-பெட்டிங் முறையில் ஏலம் விடப்படும். இதனால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க பெறுவதோடு, முறைகேடுகளையும் தடுக்க முடியும். அந்த வகையில் புதிய நடைமுறையின்படி, சிறப்பு எண்கள் வாங்குவதற்கு நுழைவு கட்டணமாக ரூ.1,000 இருந்த நிலையில் ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏலத்தில் வெற்றி பெறுவோர் 48 மணி நேரத்திற்குள் பணத்தை கட்ட வேண்டும்.

அவ்வாறு சிறப்பு எண்கள் தேவைப்படுவோர் போக்குவரத்து துறையின் அதிகாரபூர்வ இணைய பக்கமான www.parivahan.gov.in - என்ற தளத்தில் பயனர் குறியீடு, கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதில், தங்கள் ஆர்.டி.ஓ.வை தேர்ந்தெடுத்து 3 விதமான நம்பர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். அதன்படி, சூப்பர் பேன்சி, செமி - பேன்சி மற்றும் ரன்னிங் பேன்சி போன்ற விருப்பங்கள் இடம்பெற்றிருக்கும். அதனை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.

வங்கிகள் ஆன்லைனில் சொத்துகளை ஏலம் விடுவது போல இ-பெட்டிங் முறையில் குறிப்பிடப்படும் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு எண்ணுக்கும் அரசு ஒரு அடிப்படை விலையை நிர்ணயிக்கும். இது ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும். ஏலத்தின் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். சிறப்பு எண்களை பெற்றவுடன் அன்றைய தினமே வாகன டீலர்களிடம் தெரிவித்து பேன்சி எண்களை வாகனத்தில் இணைத்துவிட வேண்டும். ஒருவேளை அவ்வாறு இணைக்க தவறினால் ஆன்லைன் சிஸ்டம் தானாகவே ஒரு நம்பரை ஒதுக்கிவிடும். கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் கே.எல்.07.டிஜி.007 என்ற எண் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் போனது. புதிய நடைமுறையில் ஆட்சேபனை இருந்தால், 30 நாட்களுக்குள் தெரியப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்