சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த ரசிகர்கள்
நேரம் செல்லச்செல்ல போட்டியை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.;
சென்னை,
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது. இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் மெரினா கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர். நேரம் செல்லச்செல்ல போட்டியை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.