காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.;

Update:2025-11-29 21:27 IST

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் சுடலைமாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (60 வயது). விவசாயி. இவருடைய மனைவி சுப்புத்தாய். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

வடிவேல் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். தற்போது மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் கூட்டமாக தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தின. எனவே தோட்டத்தைச் சுற்றிலும் கம்பிவேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலையில் வடிவேல் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்தவாறு இருந்தது. இதனை அறியாமல் அந்த வழியாக நடந்து சென்ற வடிவேல் கம்பிவேலியில் சிக்கினார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலையில் தோட்டத்துக்கு சென்ற கணவர் இரவு முழுவதும் வீட்டுக்கு வராததால், இன்று காலையில் அவரைத்தேடி மனைவி சுப்புத்தாய் சென்றார். அப்போது தோட்டத்தில் வடிவேல் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின் இணைப்பை துண்டித்து, வடிவேல் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்