மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன்
ஒரு லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது மிகவும் வேதனைக்குரியது என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசின் கவனமின்மையால், மெத்தனப்போக்கால் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தவறி விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். தமிழக அரசு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தொடர் கண்காணிப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.
நேற்றைய தினம் கடலுர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமுற்றன. கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை பாதுகாத்தோ அல்லது குடோனுக்கு கொண்டு சென்றோ மூடி பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தவறி, திறந்த வெளியில் வைத்திருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்து பல லட்சக்கணக்கான ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், அரியலூர் என டெல்டா மாவட்டப் பகுதிகளில் பல இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்முட்டைகளை அவ்வப்போதே கொள்முதல் செய்யாமல் தேக்கமடைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்படி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது வாடிக்கையாகிவிட்டது. இதனை சரி செய்யாத அரசாக தமிழக தி.மு.க அரசு செயல்படுகிறது. இனியும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மழைக்காலங்களிலும், சரி, வெயில் காலங்களிலும் சரி நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறையாக, சரியாக நெல்கொள்முதல் செய்யப்படுவதும் இல்லை, கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை குடோனுக்கு கொண்டுசென்று பாதுகாப்பதிலும் காலதாமதம் ஆகிறது.
இதற்கெல்லாம் காரணம் போதிய நெல்கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள் இருப்பில் இருப்பதில்லை, சில இடங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை, கொள்முதல் செய்வதில் காலதாமதம் போன்றவற்றால் கடினமாக உழைத்து பயிரிட்டு, அறுவடை செய்யும் விவசாயிகள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் நெல் அறுவடை முடியும் தருவாயில் தற்போது பெய்த மழையால் அறுவடைப்பணி பாதிக்கப்பட்டு, நெல்லும், சில இடங்களில் பருத்தியும் சேதமடைந்துள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.