தமிழக மீனவர்களுக்கு அபராதம்: வைகோ கண்டனம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது என வைகோ தெரிவித்துள்ளார் .;

Update:2025-09-02 18:32 IST

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ராமேஸ்வரம் அருகே, பாம்பனில் இருந்து சீனி என்பவரின் விசைப்படகில், கடந்த ஆகஸ்ட் 5 இல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் உள்ள புத்தளம் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும், நேற்று செப்டம்பர் 1 ஆம் தேதி புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு, தலா 5 கோடி வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையானது, இந்திய மதிப்பில் 14.50 கோடி ரூபாய் ஆகும்.கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும் 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் மார்ச் 7 ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 18 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 17 மீனவர்களுக்கு தலா (இலங்கை மதிப்பில்) ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஒரு மீனவர் மட்டும் இரண்டாவது முறையாக சிறைபட்டிருந்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜனவரி 25 இல் கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகிலிருந்த ஜெயபால், ஏனோக், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை, சிவசங்கர், குணசேகரன், முத்து, அபி°டன், சந்தோஷ், ரேமி°டன், மேக்மில்லன், ஆரோக்கிய ஜோபினர், அகரின் ஆகிய 15 மீனவர்களை சிறைப்பிடித்தன.

15 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் பிப்ரவரி 24 ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 14 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 50 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனையும், விசைப்படகு ஓட்டுநர் ஜெயபால் என்பவருக்கு இலங்கை ரூ. 2 கோடி அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். 15 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ. 2 கோடியே 7 லட்சம், இதன் இந்திய மதிப்பு ரூ.60 லட்சத்து 48 ஆயிரம் ஆகும்.

இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய டேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக்குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் 30.06.2025 அன்று பாக் நீரிணை பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

7 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை. நிறைவடைந்ததை தொடர்ந்து 7 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் 5 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 5 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ.25 லட்சம் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். எஞ்சியுள்ள 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 2 ஆவது முறையாக சிறைபிடிக்க படுவதால் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜேசு, அண்ணாமலை, கல்யாண ராமன், செய்யது இப்ராஹிம், முனீஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் ஜூன் 29 ஆம் தேதி சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா இலங்கை மதிப்பின்படி தலா ரூ.5 லட்சம் என ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்திய மதிப்பின்படி ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகை கட்டிய பின் 8 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஜூன் 30 ஆம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள், ஜூலை 22 ஆம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்கள், ஜூலை 28 ஆம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 5 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்களுக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது மீனவ சமூகத்தை கொந்தளிக்க செய்திருக்கிறது.இலங்கை அரசின் இத்தகைய மீனவர்கள் விரோத செயல்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என தெரிவித்துள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்