குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை
பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
குற்றாலம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.