பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணை திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.;

Update:2025-06-27 02:26 IST

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இது 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 92 அடியாக இருந்தது.

இரவு 7.30 மணிக்கு வினாடிக்கு 7,120 கன அடி நீர் வந்தது. நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 7,120 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 13,140 கன அடி நீர் வந்தது. நீர்மட்டத்தை 97 அடியில் ஒரே சீராக வைத்திருக்க வினாடிக்கு 13,140 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பில்லூர் அணை செயற்பொறியாளர் மேற்பார்வையில் மின்சார வாரிய அலுவலர்கள் 24 மணி நேரமும் நீர்வரத்து, நீர்மட்டம், நீர் வெளியேற்றம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்காக தமிழக வியாபாரிகள் சம்மேளன மண்டபம், சிவசக்தி மண்டபம், காதர் மகான் உஸ்மானியா மண்டபம், வெள்ளிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்