முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

முதியோர் இல்லத்தில் சமையல் அறையில் உள்ள உணவு தயார் செய்யும் பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update:2025-06-13 08:09 IST


தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என மொத்தம் 59 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட பலருக்கும் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அவர்களில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 42), சொக்கம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முருகம்மாள் (60), செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா (40) ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று காலையில் கோவில்பட்டி செல்வராஜ் (70), மதுரை விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூர் மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமார் (72) ஆகிய 8 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அவர்களும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒரு மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி கலெக்டர் லாவண்யா, மாவட்ட சுகாதார துறை அதிகாரி கோவிந்தன், உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் பாபு, இன்ஸ்பெக்டர் கவிதா, தென்காசி தாசில்தார் மணிகண்டன், மண்டல துணை தாசில்தார் சண்முகநாதன் உள்பட அரசு அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சமையல் அறையில் உள்ள உணவு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்கு பின் அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இல்லத்தில் சம்பவத்தன்று அசைவ உணவு பரிமாறப்பட்டு உள்ளது. அந்த அசைவ உணவின் மாதிரிகள், குடிநீரும் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த இல்லத்தில் இருந்த மற்ற 48 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த இல்லத்திற்கு உதவி கலெக்டர் லாவண்யா முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 4 பேர் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து இல்லத்தை நடத்தி வரும் ராஜேந்திரன் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்