‘தியாகத்தால் பெறப்பட்ட சுதந்திர இந்தியா, இன்று புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது’ - எஸ்.டி.பி.ஐ.
சுதந்திர தேசத்தையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க உறுதியேற்போம் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“ஆங்கிலேய ஏகாதிபத்திய அடிமைத்தளையை உடைத்தெறிந்து, 79-வது சுதந்திர தினத்தை (ஆகஸ்ட் 15, 2025) கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை உற்சாகத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முன்னோர்கள், தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்து, நமக்கும் வருங்கால சந்ததிகளுக்கும் சுதந்திர காற்றை சுவாசிக்கும் உரிமையை பெற்றுத்தந்தனர். அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களை நாம் போற்றுவோம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தால் பெறப்பட்ட சுதந்திர இந்தியா, இன்று புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. கார்ப்பரேட் ஆதிக்கம், ஜனநாயகத்தின் சீர்குலைவு, தன்னாட்சி அமைப்புகளின் மீதான அரசின் கட்டுப்பாடு, மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களின் மதிப்பிறக்கம் ஆகியவை நமது தேசத்தின் அடித்தளத்தை அசைத்து வருகின்றன.
"எல்லோருக்கும் எல்லாம்" என்ற நமது முன்னோர்களின் கனவு, "சிலருக்கு மட்டுமே எல்லாம்" என்ற ஆபத்தை நோக்கி நகர்கிறது. இதனால், சுதந்திர இந்தியாவை வடிவமைத்த தலைவர்களின் கனவுகள் தகர்க்கப்படுகின்றன. நவீன ஊழல், மதவாதம், மற்றும் கார்ப்பரேட் முதலாளித்துவம் வலுப்பெற்று, மக்களாட்சியின் தத்துவங்கள் பலவீனமடைகின்றன. பணக்காரர்-ஏழை இடைவெளி விரிவடைந்து, ஊழல் முறைகேடுகள் சட்டப்பூர்வமாக்கப்படுகின்றன. இவை நமது தேசத்தின் பன்முகத்தன்மையையும், நீதியையும் அச்சுறுத்துகின்றன.
ஆகவே, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமரசமின்றி போராடி, பல தியாகங்கள் செய்து நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திர தேசத்தை, அரசியலமைப்பின் விழுமியங்களை, மற்றும் தேசத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க ஒருங்கிணைந்து உறுதியேற்போம். நமது தேசத்தை நீதி, சமத்துவம், மற்றும் உண்மையான ஜனநாயகத்துடன் மீண்டும் உயர்த்துவோம். ஜெய்ஹிந்த்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.