முடி கொட்டியதால் விரக்தி.. 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

அதிகமாக முடி கொட்டுவதால் தன்னை பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளதாக மாணவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-04-11 03:23 IST

திருப்பூர்,

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுடைய மகன்கள் விஷ்ணு, கிருத்தீஸ்வரன் (வயது 15). இதில் விஷ்ணு பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்துள்ளார்.

கிருத்தீஸ்வரன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்வு நிறைவடைந்தது. இந்தநிலையில், நேற்று கிருத்தீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருத்தீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கிருத்தீஸ்வரன் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனக்கு முடி கொட்டும் பிரச்சினை இருந்து வருகிறது. அதிகமாக முடி கொட்டுவதால் என்னை பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது. அதனால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், முடி கொட்டியதுதான் சிறுவனின் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு காரணம் எதுவும் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்