ஆன்லைன் வர்த்தக மோசடியில் பணத்தை சுருட்டும் கும்பல் - குவியும் புகார்கள்
குடும்பத்தை வசதியாக வைத்து கொள்ள வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது.;
சென்னை,
கடந்த சில ஆண்டுகளாக வணிகத்தின் மீது பலருக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதிலும் பலரின் கனவு ஆன்லைன் வர்த்தகமாக உள்ளது. அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே யாருக்கும் தெரியாமல் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இதன்மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வருமானம் பெற்று, குடும்பத்தை வசதியாக வைத்து கொள்ளலாம் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. இத்தகைய ஆசையோடு முன்னேற துடிக்கும் ஆட்கள் எளிதாக மோசடி வலையில் விழுந்து ஏமாறுவது அதிகரிக்கிறது. இந்த மோசடியில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சிக்கிக்கொள்கின்றனர்.
இதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் ஆகியவற்றில் 'ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம், பயிற்சிகள் அளிக்கப்படும், விருப்பம் உள்ளவர்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்' என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கின்றனர். ஏற்கனவே ஆன்லைன் வர்த்தக ஆர்வத்தில் இருப்பவர்கள், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
இதையடுத்து அவர்களுக்கு, வாட்ஸ்அப் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் சிறிய தொகையை முதலீடு செய்யும்படி ஒரு வங்கி கணக்கும் கொடுக்கப்படுகிறது. அதில் ரூ.1,000 முதலீடு செய்தால், அடுத்த சில நாட்களில் அது ரூ.1,200 ஆக திரும்ப கிடைக்கும். அதையடுத்து தொகையை சிறிது, சிறிதாக உயர்த்தி லட்சக்கணக்கில் முதலீடு செய்யும்படி ஆசையை தூண்டுகின்றனர்.
அதை நம்பி லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ததும், அதுவும் பல மடங்கு உயரும். ஆனால் பணத்தை திரும்ப எடுக்க முடியாது. அதுபற்றி வாட்ஸ்அப் மூலம் கேட்டால், மேலும் முதலீடு செய்யுங்கள் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். எத்தனை முறை, எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதை திரும்ப பெற முடியாது. ஒருகட்டத்தில் வாட்ஸ்அப் மூலமாகவும் விளக்கம் கேட்கமுடியாமல் போய்விடுகிறது.
அதன்பின்னரே மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து புலம்புகின்றனர். குறுகிய காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கும் ஆசையில் சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து தவிக்கின்றனர். இறுதியில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துவிட்டு பணம் திரும்ப கிடைக்குமா? என்று காத்திருக்கின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் வர்த்தக மோசடி குறித்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதன்படி 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இதில் பட்டதாரிகள், என்ஜினீயர்கள், ஐ.டி. ஊழியர்கள் என அனைவரும் ஏமாந்து இருக்கின்றனர். குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை பணத்தை இழந்து உள்ளனர்.
அந்தவகையில் மாவட்டத்தில் மட்டும் ரூ.15 கோடி அளவுக்கு ஆன்லைன் வர்த்தக மோசடியில் பணத்தை இழந்து உள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருசிலர் கைது செய்யப்பட்டாலும், பணத்தை மீட்பது பெரும் சவாலாக உள்ளது.