மரபணு மாற்றப்பட்ட நெல் விதை.. மத்திய அமைச்சர் வெளியீடு - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

உணவு நஞ்சானால் மனிதர்கள் எங்கே வாழ்வது... மனிதர்கள் உயிர் இழப்பிற்கு இவ் விதைகள் தேவைதானா? என்பதை அரசு முடிவெடுக்க வேண்டும்.;

Update:2025-05-05 14:59 IST

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன் முன் எம். எல்.ஏ. பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில்,

நேற்றைய தினம்.. டெல்லியில் மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரபணு மாற்றப்பட்ட இரண்டு நெல் விதைகளை புதிதாக அறிமுகம் செய்து பெருமைப்பட்டுள்ளார். இவ்விதைகள் பருவநிலை மாற்றத்திலும் தாக்குப்பிடிப்பதுடன்.. 30 சதம் கூடுதலாக விளைச்சல் கிடைக்கும்.. தண்ணீர் பற்றாக்குறையை தாக்கு பிடிக்கும் என பெருமையுடன் இதை அறிமுகம் செய்துள்ளார்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காது...பருத்தி, கத்திரி, தக்காளி, மிளகாய் ஆகிய செடிப் பயிர்களில் தான் மரபணு மாற்று விதைகளை வேளாண் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதை அறிமுக நிலையிலேயே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிர்த்து வரும் நிலையில்...இது உச்சநீதிமன்றத்தில் வழக்கிலும் உள்ளது.

இந்தியாவில் மரபணு மாற்று விதைகளை ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக்கூடங்களே இல்லை என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெனட்ரிக் என்ஜினியரிங் அத்தாரிட்டி கவுன்சில் கூறியுள்ளது. வேளாண் உற்பத்தி இரு மடங்கு உயர வேண்டும் என புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால் நஞ்சான விதைகளும்....அதீத இரசாயனஉரங்களும்.. பூச்சி மருந்துகளும்...நோய் மருந்துகளும் இந்திய சுற்றுச்சூழலை கேடாக்கி...உண்ணும் உணவில் நஞ்சு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்மார்களிடம் குழந்தைகள் அருந்தும் பாலிலும் விஷம். மக்கள் சுகாதார வாழ்வுக்கான உணவு உற்பத்தி தேவையா... உலகத்தோடு இந்திய பொருளாதாரம் போட்டி போட வேண்டும் என ஏற்றுமதியை மட்டுமே  குறிக்கோளான உணவு உற்பத்தி தேவையா.....?என மத்திய அரசு உடனடியாக தீர்மானிக்க வேண்டும். உணவு நஞ்சானால் மனிதர்கள் எங்கே வாழ்வது... மனிதர்கள் உயிர் இழப்பிற்கு இவ் விதைகள் தேவைதானா... என்பதை மத்திய அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.

ஏற்றுமதியான பாசுமதி அரிசியை அந்த நாடு வாங்க மறுத்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். டெல்லி பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை கூட எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில் புதிதாக இப்படி ஒரு தாக்குதல்.

மரபணு மாற்றப்பட்டது என்பதை லாவகமாக மரபணு திருத்தப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால்..... மரபணு திருத்தம் என மாற்றி இந்திய மக்களையும்.. உச்ச நீதிமன்றத்தையும் ஒன்றியஅரசு ஏமாற்றுகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு தரிசு நிலங்களை சரிசெய்து... பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தி.... விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே வேளாண்மை உற்பத்தி மேலும் ஒரு மடங்கு பெருக்கலாம்.

எனவே ஒன்றிய அரசு சிந்தித்து... மரபணு மாற்று ஆய்வை மற்றும் விதைகளை தடுத்து நிறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் நுகர்வோர்களை பாதுகாக்க... விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்திட.... இவ்விதைகளை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடும்...

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்