காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு - சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க கோர்ட்டு உத்தரவு
நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையின் நிலை குறித்து விளக்கமளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.