தூத்துக்குடியில் 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: கடைக்கு சீல்
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் பிரியங்கா உத்தரவின்பேரில், தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.;
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா ஆகியோர் உத்தரவின்பேரில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திரேஸ்புரம் பகுதியில் மாநகர நல அலுவலர் சரோஜா தலைமையில், வடக்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்த 45 கிலோ புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.