கவர்னருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை: சென்னை பல்கலைக்கழக விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.;

Update:2026-01-22 16:25 IST

சென்னை,

கவர்னர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தநிலையில், சில தினங்களுக்கு முன் தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்க நாளில், கவர்னர் உரையை படிக்க மறுத்து ஆர்.என். ரவி வெளிநடப்புச் செய்தார். 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கவர்னராக பதவியேற்ற ஆர்.என். ரவி, 2022ஆம் ஆண்டின் கவர்னர் உரையைத் தவிர, மற்ற ஆண்டுகளில் அதாவது தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் உரை எதனையும் முழுமையாகப் படிக்கவில்லை. 'கவர்னர் உரை தேவையில்லை' என அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கோரப் போவதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், தமிழகத்தில் கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் செயல்படும் விதம் குறித்து அமைச்சர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது,

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் கவர்னருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை. எனவே சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கவர்னர் பங்கேற்ற விழாவைப் புறக்கணித்திருந்தார். தற்போது கோவி. செழியனும் அதே பாணியைப் பின்பற்றியிருப்பது, தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையிலான நிழல் யுத்தம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்