சென்னையில் கனமழை
சென்னை பகுதிகளை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
சென்னை,
சென்னை உட்பட வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் வாட்டி வதைத்தது. ஜூன் மாதமே எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாத நிலையில், இந்த மாதம் மழை இருக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் மழை இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
குறிப்பாக நேற்றைய தினம் சென்னையில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால், இன்று காலநிலை மெல்ல மாறி வருகிறது. இன்று மாலை சென்னையில் மிதமான மழை பெய்யும் சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் எழும்பூர், சென் டிரல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் வண்ணாரப்பேட்டை, வடபழனி, கேகே நகர், வளசரவாக்கம், நெசப்பாக்கம், கோயம்பேடு, தி.நகர், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், குமணன் சாவடி, திருவேற்காடு, போரூர், அய்யப்பன்தாங்கல், வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னைவாசிகளை வாட்டி வதைத்த வெயில், தற்போது பெய்த மழையால் மக்களின் மனதை குளிர்வித்தது.
அதேநேரம், அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சாலையோரங்களில் மழை நீர் தேங்கிய சம்பவங்களும் அரங்கேறின.